தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள செல்போன் பயனாளர்களின் மொபைல் போன்களுக்கு இன்று(02-05-2026) ஒரு முக்கிய எச்சரிக்கை செய்தி வரவுள்ளது. வெள்ளம், பூகம்பம் மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில், பொதுமக்களுக்கு மிக விரைவாகத் தகவல்களைக் கொண்டு சேர்த்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில், இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து ஒரு புதிய தொழில் நுட்பத்தைச் சோதித்து வருகின்றன. செல் ஒளிபரப்பு எனப்படும் இந்த உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் மூலம், ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து செல்போன்களுக்கும் ஒரே நேரத்தில் எச்சரிக்கை செய்திகளை அனுப்ப முடியும். இந்தத் தொழில்நுட்பமானது நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் குறுஞ்செய்திகளை விட அதிவேகமானது மட்டுமல்லாமல், இணைய இணைப்பு இல்லாமலும் சிறப்பாகச் செயல்படும் திறன் கொண்டது. செல்போன் டவரின் வரம்பிற்குள் இருக்கும் அனைத்து சாதனங்களுக்கும் இந்த எச்சரிக்கை உடனுக்குடன் சென்றடையும்
என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். இன்று இந்த அவசர எச்சரிக்கை சோதனை நடத்தப்பட உள்ளது. இந்தச் சோதனையின் போது, உங்கள் மொபைல் போனில் அதீத சத்தத்துடன் கூடிய எச்சரிக்கை ஒலி மற்றும் அதிர்வு ஏற்படும். மேலும், திரையில் ஆங்கிலம், இந்தி அல்லது உங்கள் பிராந்திய மொழிகளில் ‘இது ஒரு மாதிரி சோதனை செய்தி’ என்ற தகவல் தோன்றும். சிலருக்கு இந்தச் செய்தி ஒன்றுக்கும் மேற்பட்ட முறையும் வரக்கூடும். பொதுமக்கள் இந்த அதீத ஒலியைக் கேட்டுப் பீதியடையவோ, அல்லது அச்சப்படவோ தேவையில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Comments are closed.