திருச்சியில், பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா? அமைச்சர் கே.என். நேரு பேட்டி….
சென்னையை அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் திகழ்ந்து வருகிறது. இங்கிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக இந்திய வி்மான நிலைய ஆணையக் குழுமம் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 2019 -ம் ஆண்டு கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வந்தது. ஆனாலும், கூடுதல் செலவினமாக ரூ 249 கோடி என மொத்தம் ரூ.1200 கோடி செலவானது. அதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றன. இந்நிலையில் விமான நிலைய திறப்பு விழா ஜனவரி 2ம் தேதி நடைபெறும் என்றும், இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே திறக்கப்பட உள்ள விமான நிலையத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு இன்று(26-12-2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு, வருகிற ஜனவரி மாதம் 2-ம் தேதி திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று தெரிகிறது. திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இருந்தாலும் முதல்வரின் வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் வைத்திலிங்கம், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைர மணி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.