Rock Fort Times
Online News

யார் கூடுதல் வாக்குகளை பெற்றது? உதயநிதி பேச்சுக்கு முதலமைச்சர் விஜய் பதிலடி…!

சட்டப் பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் தவெகவின் வாக்கு சதவீதம் குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் விஜய் அறிக்கை வாயிலாகப் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று ( மே 13) சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் நமது அரசு மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான திமுகவுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்து கொள்வோம். நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத் தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா? வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு.

அதேபோல, தி.மு.க. தனிக்கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை. இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்வது. சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம் தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர். இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன?
திமுக ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம்.
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-ல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும்.

ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும்.
ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை.
இவ்வாறு முதல்வர் விஜய் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்