Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்: நாளை(மே 14) நடக்கிறது..!

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் தேர்த் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் நம்பெருமாள் புறப்பாடும், சுற்றுப்பகுதிகளில் மண்டகப்படிகளும், இரவு வாகன புறப்பாடுகளும், திருவீதி உலாக்களும் நடந்து வந்தன.
8ம் திருநாளான இன்று (மே 13) இரவு தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா நடைபெறுகிறது. இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (14ந்தேதி) காலை நடக்கவுள்ளது. இதற்கென உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 4.30 மணியளவில் சித்திரை தேர் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். தொடர்ந்து 4.45 முதல் 5 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் காலை 6 மணியளவில் பக்தர்களால் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேரோட்ட விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ரெங்கநாதர்கோயில் நிர்வாக அதிகாரியும், இணைஆணையருமான சிவராம்குமார் தலைமையில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். நாளை மறுநாள் (15 ந்தேதி) இரவு சப்தாவரணத்தை தொடர்ந்து திருவிழா கொடியிறக்கப் படுகிறது. வருகிற 16ந்தேதி இரவு ஆளும்பல்லக்கு உலாவுடன் சித்திரைத்தேர் உற்சவ நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்