திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, கல்லூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் ராம்குமார் (34). இவர், ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக போலீஸ் அவசர அழைப்பு எண் 100 க்கு ராம்குமார் புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில், திருச்சி போலீஸ் ஏடிஎஸ்பி குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் தடயவியல் நிபுணர் மற்றும் போலீஸ் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு, ராம்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொடுக்கல்- வாங்கல் தகராறு காரணமாக ராம்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது போல ராம்குமார் நாடகமாடுகிறாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீசார், 3 பேரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments are closed.