விருதுநகர் அருகே வச்சக்காரபட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. விருதுநகர் அருகே வச்சக்காரபட்டியில் காமராஜ்புரத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 24-ம் தேதி காலை தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது பட்டாசுக்கு தேவையான வேதிபொருட்களை கலக்கும் அறையில் உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 3 அறைகள் தரைமட்டமாகின.அறையில் வேலை பார்த்த கன்னிச்சேரிபுதூரை சேர்ந்த காளிராஜ் (23), முதலிபட்டியை சேர்ந்த வீரக்குமார் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், கன்னிச்சேரிபுதூரை சேர்ந்த போர்மேன் சரவணக்குமார் (24), இனாம்ரெட்டியபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (17) ஆகியோர் படுகாயமடைந்தனர். நடந்த 25ம் தேதி சரவணக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுந்தரமூர்த்தி (17) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.இதன் மூலம் வச்சக்காரபட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. பட்டாசு ஆலை விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.