திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் 40- வது வார்டு பகவதிபுரம் வ.உ.சி.நகர் பகுதியில் தேர்தலுக்கு முன்பாக சுமாராக இருந்த சாலையை பெயர்த்து எடுத்து ஜல்லிக் கற்கள் நிரப்பப்பட்டது. தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்றுவரை இந்த சாலை புதிதாக அமைக்கப்படவில்லை. தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருவதால் இந்த சாலையானது, சேறும், சகதியமாக மாறி உள்ளது. இதனால், இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் தினந்தோறும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி மாநகராட்சி அலுவலகத்திற்கு பலமுறை நேரடியாக சென்று எடுத்துக் கூறியும் இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பவர் முத்துக்குமார் மற்றும் சிலர் கூறுகையில், எங்கள் பகுதியில் சாலையும் முழுமையாக அமைக்கப்படவில்லை.
பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களும் இன்றுவரை மூடப்படவில்லை. மற்ற பகுதிகளில் 6 மாதத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால், எங்கள் பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங்கள் பல ஆண்டுகளை கடந்தும் இன்னும் மூடப்படவில்லை. மேலும், ஸ்ரீபகவதி அம்மன் ஆலய திருவிழா 10 நாட்களாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதனால், இந்த சாலை வழியாக பால் காவடி, தீச்சட்டி எடுத்துச் சொல்லும் பக்தர்கள் மற்றும் ஊர் மக்கள் மிகவும் சிரமத்துடன் தான் சென்று வருகிறார்கள். இது விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் இப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட வேண்டிய நிலை ஏற்படும் என்றனர்.
Comments are closed.