தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே பேரறிஞர் அண்ணா குறித்து சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதற்கு அதிமுக மற்றும் திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முழுக்க முழுக்க இந்து மதத்தைச் சார்ந்தவர் என்று பேசியுள்ளார். இதற்கு அதிமுக மூத்த நிர்வாகி ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “அண்ணாமலை, தனது சொந்த அரசியல் லாபத்துக்காகவும், தமிழகத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர். அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. தமிழகத்தில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக திகழச் செய்தவர் ஜெயலலிதா என்று தெரிவித்துள்ளார்.
Comments are closed.