அதிமுகவில் இருந்து அணி, அணியாக வெளியேறும் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள்… * கடும் அதிர்ச்சியில் கட்சித் தலைமை!
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்று 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியினர் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் அதிமுக இரண்டாக உடைந்தது. சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினர் த.வெ.க. அரசை ஆதரித்து வாக்களித்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களின் கட்சிப்பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.
த.வெ.க. வில் இணைந்தனர்,
இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதற்கிடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட சிலர் தவெகவில் இணைந்தனர். இன்று (ஜூன் 6) அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, என்.ஆர்.சிவபதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி, சங்ககிரி சுந்தரராஜூ, வீரபாண்டி ராஜமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜூ, கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், சாத்தூர் ராஜவர்மன், ஆற்காடு வி.கே.ஆர். சீனிவாசன் உள்ளிட்டோர் இன்று அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
ஏற்கனவே அதிமுக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட சிலர் திமுகவில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விராலிமலை விஜயபாஸ்கர் ஆகியோர் இன்னும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும் அணி அணியாக வெளியேறி மாற்றுக் கட்சிகளில் இணைவது அதிமுக தலைமை மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.
.

Comments are closed.