திருச்சி, துவாக்குடியில் ரவுடியின் மகன்கள் வெட்டியதில் படுகாயம் அடைந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் உயிரிழப்பு- 4 பேர் கைது…!
திருச்சி, துவாக்குடி அண்ணா வளைவு பெரியார் மணியம்மை நகரை சேர்ந்தவர் முகமது ஷரீப் (35). இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் மற்றும் வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவர், அண்ணா வளைவு வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சாத்தையாவின் மகன் கார்த்திக் என்பவருடன் நட்பாக பழகி வந்தார். அந்தவகையில் கார்த்திக்கின் நண்பரான செல்வம் என்பவருடனும் முகமது ஷரீப்புக்கு பழக்கம் ஏற்பட்டது. செல்வமும், முகமது ஷரீப்பும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் முகமது ஷரீப் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரூ 43 ஆயிரத்தை இழந்ததாகவும், அதன்பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டபோது ரூ.50 ஆயிரம் இழந்ததாகவும் கூறப்படுகிறது. இதில், பெருமளவு தொகையை செல்வத்திடம் கடன் வாங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த தொகையை செல்வம் கேட்டபோது ஷரீப் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பணம் கொடுக்கல்- வாங்கல் குறித்து செல்வம், கார்த்திக்கிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் ஜனவரி 19-ம் தேதி இரவு நண்பர்கள் அனைவரும் மது அருந்தி கொண்டிருந்தபோது பணம் கொடுக்கல்- வாங்கல் குறித்து கார்த்திக் பேசியுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பா னது. இதனை தொடர்ந்து கார்த்திக், ஷெரீப்புக்கு போன் செய்து சமாதானம் பேசுவதற்காக வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்பேரில், முகமது ஷரீப், கார்த்திக் வீட்டிற்கு சென்றபோது அங்கு தகராறு ஏற்பட்டு கார்த்திக் மற்றும் அவருடைய அண்ணன் காளிதாஸ் மற்றும் சிலர் முகமது ஷரீபை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமது ஷரீபை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது ஷரீப் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அதனைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக் அவரது சகோதரர் காளிதாஸ், செல்வம் மற்றும் முகமது பாரூக் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments are closed.