திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் வழியாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தின் ஒரு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மற்றொரு பாலத்தில் திருப்பி விடப்பட்டது. பின்னர், நெடுஞ்சாலைத் துறையினர் சுமார் இரண்டு மாதம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர் . சீரமைக்கும் பணி முடிந்து ஐஐடி பேராசிரியர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் நேரில் ஆய்வு செய்து பாலத்தின் உறுதி தன்மையை சோதித்துப் பார்த்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் திருச்சி – பொன்மலை ஜி கார்னர் மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. இந்தநிலையில் சீரமைக்கப்பட்ட இந்த பாலத்துக்கு அருகே சங்கிலியாண்ட புரத்துக்கு செல்லும் சப்-வேக்கு அருகில் பாலத்தில் இரண்டு இடங்களில் லேசாக விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் விரிசல் மேலும் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்படுத்துவதற்கு முன்பாக பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.