திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி.கார்னர் பகுதியில் 2 பாலங்கள் உள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தின் இடதுபுறமுள்ள (திருச்சி–சென்னை வழித்தடம்) ஒரு பகுதியில் 11-1-2024- ஆம் தேதி இரவு திடீரென பழுது ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் வந்து பழுதடைந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது டி.வி.எஸ்.டோல்கேட்டிலிருந்து செல்லும் சர்வீஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மாடு வதைகூடம் அருகில் பாலத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பாலத்தின் தூண் சற்று கீழே இறங்கியுள்ளது தெரியவந்தது. அதனை, உடனடியாக சீரமைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து முதல்கட்டமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பழுதடைந்த பாலத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று(13-01-2024) பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, மாநகராட்சி மண்டல குழு 3ன் தலைவர் மு.மதிவாணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.