Rock Fort Times
Online News

கொளத்தூர் இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியா?* பொதுச்செயலாளர் துரைமுருகன் பதில்..!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலினை தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு தோற்கடித்து வரலாறு படைத்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வி.எஸ்.பாபு நேற்று முன்தினம் (நவம்பர் 19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவாரா? என்ற கேள்வி திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (21-11-2026) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகனிடம், கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவாரா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது ஆலோசனைக் கூட்டமே இல்லை, சும்மா தான் பேசிக் கொண்டிருந்தோம். கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவில்லை. நாங்கள் அதையெல்லாம் பேசவில்லை, சும்மா டிவி பார்த்துக் கொண்டிருந்தோம்” என்று பதிலளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்