திருச்சி மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’… * வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு..!
திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் இதர வரி இனங்கள் மூலம் மாநகராட்சிக்கு 242 கோடி ரூபாய் நிலுவை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாநகராட்சிக்கு நீண்டகாலமாக வரி மற்றும் கட்டணங்களைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்களிடமிருந்து நிலுவைத் தொகைகளை வசூலிக்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை கட்டணங்களில் அதிக அளவில் நிலுவை வைத்துள்ளவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகளைத் துண்டிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் குத்தகைதாரர்கள், உரிய கடை வாடகையைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட கடைகளைப் பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் தங்களது சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் உடனடியாகச் செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதேபோன்று, மாநகராட்சிக் கடைகளின் குத்தகைதாரர்கள் தங்களது வாடகை நிலுவைத் தொகைகளை உடனடியாகச் செலுத்தி சட்டரீதியான நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் நே. பொன்மணி கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.