மக்களை அவதிக்குள்ளாக்கும் திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம்… பயனடைந்தவர்கள் யார்?* முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கேள்வி..!
திருச்சியில் ஏற்கனவே மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என இரு பேருந்து நிலையங்கள் இருந்தாலும் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக கூறி திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பன்னாட்டு விமான நிலையத்துக்கு நிகராக அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப்பெரிய பேருந்து முனையமாக 38 ஏக்கா் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் ரூ.408.36 கோடியில் இப்பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இதனை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கிருந்து தான் பெரும்பாலான வெளியூர் பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. இந்த புதிய பேருந்து நிலையத்தால் எவ்வித பயனும் இல்லை என்பது பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. காரணம் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் செல்ல வேண்டுமென்றால் நகர பேருந்துகளில் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. அப்படியே சென்றாலும் நகரப் பேருந்துகள் முதல் தளத்தில் ஏறி நிற்கின்றன. அங்கிருந்து உடைமைகளுடன் கீழ் தளத்திற்கு வர லிஃப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் இருந்தாலும் அது சில சமயங்களில் வேலை செய்வதில்லை. இதனால் குழந்தைகளுடனும், உடைமைகளுடனும் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்கு வர அதிக சிரமம் ஏற்படுகிறது.. புதிய பேருந்து நிலையத்தில் உணவு கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றன. ஒரு குடும்பத்தோடு உணவு சாப்பிட்டால் ஆயிரம் ரூபாய் வரை பில் வந்துவிடுகிறது என்று பயணிகள் ஆதங்கப்படுகின்றனர்.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன் கூறுகையில், திருச்சி வாழ் மக்கள், பூகோள அமைப்புப்படி, குறிப்பாக உறையூரில் இருக்கும் ஒருவர் தஞ்சை செல்வதற்கு, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வருவதென்றால் பல அவதிகளை சந்திக்க நேரிடுகிறது. இதே பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அவர் புறப்பட்டார் என்றால், பஞ்சப்பூர் செல்வதற்குள் அவர் தஞ்சையை தாண்டி இருப்பார். இதனால் பஞ்சப்பூர் செல்வதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. பயணிகள் மன்னார்புரம், பால் பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், நம்பர் ஒன் டோல்கேட் போன்ற இடங்களில் வெயில், மழையில் நின்று அந்த வழியாக தங்களது ஊர்களுக்கு வரும் பேருந்துகளில் ஏறி பயணம் செய்கிறார்கள். இந்த இடங்களில் கழிப்பிடங்கள் உட்பட அடிப்படை வசதிகள் இல்லை. மழை வெயில்களில் அவதிப்படும் குழந்தைகள், பெண்கள் என ஒட்டுமொத்த திருச்சி மக்களின் சாபத்தை வாங்கி கட்டப்பட்ட பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தின் அடிப்படை நோக்கம் தான் என்ன?, இதன் மூலம் பயன் பெற்றவர்கள் யார்? புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே புதிதாக காய்கறி மார்க்கெட்டை கொண்டு வந்தால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதா? இவ்வாறு மக்களுக்கு எவ்வகையிலும் உதவாத, இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் மக்களுக்கு பல துன்பங்களை தரும் இந்த புதிய பேருந்து நிலையத்தை மூடி,

மீண்டும் மத்திய பேருந்து நிலையம் பழைய இடத்திலே இயங்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த திருச்சி மக்களின் எண்ணமாக உள்ளது. கட்டி முடிக்கப்பட்ட பஞ்சப்பூரில், கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா போல், சென்னையில் உள்ள உலக வர்த்தக அரங்கத்தை போல் மறு உருவாக்கம் செய்தால், திருச்சிராப்பள்ளியின் தொழில் முன்னேற்றத்திற்கு அது உதவுமே அன்றி, செலவழித்த பணம் வீணாகாது. இவ்வாறு அவர் கூறினார்.


Comments are closed.