திருச்சி திருவெறும்பூர் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் வினோத் பாண்டி(28). சமூக ஆர்வலரான இவர், ஏழை எளிய மக்களுக்கும், வயதானவர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். உணவின்றி தவிப்போருக்கு உணவு வாங்கிக் கொடுத்தும், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கியமான நாட்களில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பென்சில், பேனா போன்றவற்றை தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்து உதவி வருகிறார். அதேபோல, கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் பாட்டில், பிஸ்கட் போன்றவற்றை வழங்கி உள்ளார். ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளில் திருத்தம், வயதானவர்களுக்கு வங்கிக் கணக்கு ஏற்படுத்தி கொடுத்தல், ரயில் டிக்கெட் வாங்கி கொடுத்தல், விதவைகளுக்கு உதவித்தொகை பெற்றுத் தருதல், வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை வாங்கி கொடுத்தல் போன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது சமூக சேவையை பாராட்டி ஏற்கனவே பல்வேறு விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில் ஸ்ரீரங்கம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், வினோத் பாண்டியின் சமூக சேவைகளை பாராட்டி “சமூக போராளி டிராபிக் ராமசாமி நினைவு பாராட்டு சான்றிதழ்” வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
Comments are closed.