நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நாளை நள்ளிரவு 12 மணி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்.1ம் தேதி, சுங்கச்சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியானது. பின்னர் மார்ச் 30ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து, சுங்கச்சாவடி கட்டண மாற்றம் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் முடிவடைந்ததையடுத்து, வரும் திங்கள்கிழமை ஜூன் 3ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வருகிறது. அதன்படி சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணமும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணமும் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படுகிறது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணமும் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்படுகிறது. தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக திருச்சி – கருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கல்லக்குடி, வேலூர் – விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள வல்லம், இனம் கரியாந்தல், தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.