திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஒரு வாரமாக சோர்வாக இருந்துள்ளார். இது குறித்து அவருடைய பெற்றோர் விசாரித்த போது நைனா முகமது என்பவர் தனக்கு மாத்திரைகள் தந்ததாகவும் அதை உட்கொண்டதிலிருந்து சோர்வாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பாலக்கரை முதலியார் சத்திரம், குட்செட் பகுதியை சேர்ந்த பேட்ட என்கிற நைனா முகமது (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் இளம்பெண்ணுக்கு போதை மாத்திரைகளை கொடுத்தது தெரிய வந்தது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 14 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். போதை மாத்திரை விற்பனை தொடர்பாக சஞ்சய் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்பனை தாராளமாக நடந்து வருவதாகவும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை குறி வைத்து விற்கப்படுவதாகவும், இதற்கு இளைய சமுதாயத்தினர் அடிமையாகி வருவதாகவும், இதனை தடுக்க காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.