திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறி இன்ஜினியரிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்த பெண்ணுக்கு வலை…!
கோவை சிங்காநல்லூர் கிருஷ்ணா காலனியை சேர்ந்தவர் இன்ஜினியர் கோகுல கிருஷ்ணன் (வயது 37). தொழில் அதிபர். ஏற்கனவே திருமணமான இவர் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார். மறுமணம் செய்வதற்காக ஆன்லைன் திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டார். அப்போது அழகான தோற்றத்துடன் கூடிய ஒரு பெண், கோகுல கிருஷ்ணனை தொடர்பு கொண்டார். தனது பெயர் ரதி மீனா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அந்தப் பெண் தானும் திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடி வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து இருவரும் நட்பாக பழக தொடங்கினர். இந்தநிலையில் அந்த பெண் தான் ஒரு ஆன்லைன் செயலியை அனுப்புவதாகவும், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று கோகுல கிருஷ்ணனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய கோகுல கிருஷ்ணன், அந்த பெண் கூறிய வங்கி கணக்கிற்கு
ரூ.23 லட்சத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார். அதன்பின்னர், அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகுல கிருஷ்ணன், இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஜினியரிடம் ரூ.23 லட்சத்தை மோசடி செய்த அந்த பெண்ணை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.