திருச்சி, பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகரைச் சேர்ந்த இந்திய ஜனநாயக கட்சியின் இளைஞரணி மாவட்டச் செயலாளரும், ரவுடி பட்டியலில் உள்ள பட்டறை சுரேஷ் (எ) எஸ்.மைக்கேல் சுரேஷ் (44) என்பவருக்கு திருச்சி அருகே நத்தமாடிப்பட்டி கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் பிறந்தநாள் விழா நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் வாகனங்களை திருவெறும்பூர் போலீஸார் சோதனையிட்டனர். அப்போது, பட்டறை சுரேஷுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த அவரது ஆதரவாளரான புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவரின் வாகனத்தை போலீஸார் சோதனையிட்டதில், அதில் 79 செ.மீ. நீளமுள்ள பித்தளை வாள் ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், இந்த வாளை சதீஷ்குமார், பட்டறை சுரேஷுன் பிறந்தநாள் பரிசாகக் கொடுப்பதற்காக எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வாளைப் பறிமுதல் செய்த போலீஸார், சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி மாவட்டத்தில், சட்டவிரோத காரியங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆதரவாக பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களுக்கு போஸ்டர் அடிப்பவர்கள், அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களால் கேக் வெட்டுபவர்கள், சமூக வலைதளத்தில் ரீல்ஸ் போடுபவர்கள், லைக் போடுபவர்களை மாவட்ட சமூக வலைதள கண்காணிப்புக் குழு 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments are closed.