அடுக்குமாடி குடியிருப்பு 4- வது தளத்தில் இருந்து தவறி விழுந்து உயிர் தப்பிய குழந்தையின் தாய் தற்கொலை…!
சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பு 4-வது தளத்தில் வெங்கடேஷ்- ரம்யா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கிரண்மயி என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த ஏப்ரல் 28ம் தேதி குடியிருப்பின் பால்கனியில் நின்று, ரம்யா தனது குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது குழந்தை கிரண்மயி, ரம்யாவின் மடியில் இருந்து தவறி விழுந்தது. குழந்தை அதிர்ஷ்டவசமாக 2-ஆவது தளத்தில் மழைக்காக அமைக்கப்பட்டுள்ள தகர மேற்கூரையின் மீது விழுந்தது. இதைப் பார்த்த ரம்யா அலறித் துடித்தார். அவரது அலறல் சப்தம் கேட்டு உடனடியாக அக்கம் பக்கத்தில் வசிக்கும் குடியிருப்போர் ஓடி வந்தனர். அவர்கள் துரிதமாக செயல்பட்டு 2-ஆவது தளத்தில் தகரக் கூரையின் மீது கிடந்த குழந்தையை பத்திரமாக மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு தம்பதி கோவை மாவட்டம் காரமடைக்கு குடி பெயர்ந்தனர்.
இந்த சம்பவம் நடந்ததிலிருந்து ரம்யா, மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அவர் இன்று (19-05- 2024 )வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல்அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக காரமடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.