கர்நாடக மாநிலம் பெங்களூரு-துமகுரு நெடுஞ்சாலையில் உள்ள அரசினகுண்டே அருகே உள்ள அடகமாரனஹள்ளி சந்திப்பின் மேம்பாலத்தில் அம்மாநில அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பாலம் தரை தளத்திலிருந்து சுமார் 40 அடி உயரம் கொண்டதாகும். இந்த பாலத்தின் வழியாக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று குறுக்கே வந்ததாக தெரிகிறது. அதன்மீது மோதாமல் இருக்க பேருந்தின் டிரைவர் பஸ்சை திருப்பிய போது நிலை தடுமாறி சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது. இதனால், அதிலிருந்த பயணிகள் அபய குரல் எழுப்பினர். உடனே, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், போலீசாரும் பயணிகளை ஒவ்வொருவராக பத்திரமாக மீட்டனர். இருப்பினும், ஓட்டுநர் உட்பட 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்தரத்தில் தொங்கிய பஸ்ஸும் மீட்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Comments are closed.