வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் விவகாரம்: தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை …!
தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் சில பேருந்துகள் நாகாலாந்து, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தங்களது ஆம்னி பேருந்துகளை பதிவு செய்து தமிழகத்தில் இயக்கி வந்தன. அவ்வாறான ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவு எண் கொண்டதாக மாற்றிக் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், ஒரு சில பேருந்துகளை தவிர மற்ற தனியார் ஆம்னி பேருந்துகள் வெளிமாநில பதிவு எண்களிலேயே இயங்கி வந்தன. இதனால், வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க அரசு தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் கே.ஆர்.சுரேஷ்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ‘கேரளாவில் இருந்து இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் அகில இந்திய சுற்றுலா பெர்மிட் பெற்று தமிழகம் வழியாக மற்ற வெளி மாநிலங்களுக்கும் இயக்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசின் உத்தரவால், கேரளாவில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்திலும், தமிழகம் வழியாகவும் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான விடுமுறை கால சிறப்பு அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘தமிழகத்துக்கு ஏற்படும் வருவாய் இழப்பை கருத்தில் கொண்டே இவ்வாறு உத்தரவிடப்பட்டது. வெளிமாநில பதிவு எண் கொண்ட சுற்றுலா வாகனங்களை ரெகுலர் சர்வீஸாக இயக்குவதை எதிர்த்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது’ என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள், ‘‘அகில இந்திய சுற்றுலா பெர்மிட் பெற்றிருக்கும் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படுவதை தமிழக அதிகாரிகள் தடுக்க கூடாது’’ என்று கூறி, தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு விரிவாக பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.
Comments are closed.