திருச்சி, திருவெறும்பூர் அண்ணா வளைவு பகுதியில் கல்லூரிக்கு அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் நூதன போராட்டம்…! ( வீடியோ இணைப்பு)
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்பது விதிமுறை ஆகும். ஆனால், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அண்ணா வளைவு பகுதியில் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகாமையில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருவது மாணவர்களின் கல்விக்கும், அவர்கள் எதிர்காலத்திற்கும் மிகவும் ஆபத்தானது. அதேபோல, மதுபான கடைகள் இயங்கி வரும் பகுதியானது தேசிய நெடுஞ்சாலைக்கு அருகாமையில் உள்ளது என்பதால் பல விபத்துக்கள் நேரிட்டு வருகிறது. மேலும், மது அருந்தும் நபர்கள் அருகாமையில் இருக்கக்கூடிய கல்லூரியை மது அருந்தும் இடமாக தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வரக்கூடிய மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்கின்றனர். இதனை அறிந்த இந்திய மாணவர் சங்கம், டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டுமென சமீபத்தில் போராட்டம் நடத்தியது. போராட்டத்தின் எதிரொலியாக டாஸ்மாக் மதுபான கடையின் அதிகாரிகள், மாணவர்களை அழைத்து திருவெறும்பூர் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு சில நாட்களில் அண்ணா வளைவு பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையை வேறொரு இடத்திற்கு மாற்றி விடுவோம் என உறுதி அளித்தனர். ஆனால், அந்த டாஸ்மாக் கடை வேறு இடத்துக்கு மாற்றப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அரசியல் கட்சியின் முக்கிய புள்ளி ஒருவர் டாஸ்மாக் பாரை ஏலம் எடுத்து நடத்தி வருவதால் அரசு மதுபான கடையை உடனடியாக இழுத்து மூடுவதற்கு மாவட்ட
நிர்வாகம் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை கண்டித்தும், கல்லூரி அருகே செயல்படும் டாஸ்மாக் மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற கோரியும் இன்று(03-10-2024) இந்திய மாணவர் சங்கத்தின் கிளை நிர்வாகி ஆர்த்தி தலைமையில் மாணவர்கள் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் ஜி.கே.மோகன் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் ஆமோஸ், புறநகர் மாவட்ட தலைவர் வைரவளவன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில், கிளை நிர்வாகி மாணவி துளசி ராம் நன்றியுரை ஆற்றினார். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு மாணவர் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து நூதன முறையில் இறந்தவர் போல கழுத்தில் மாலை அணிந்து கொண்டு சாலையில் படுத்தும், அவருக்கு சக மாணவர்கள் இறுதிச் சடங்குகள் நடப்பது போலவும் சித்தரித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். மாணவர்களின் மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.