திருச்சி என்ஐடி-ல் என்ன நடக்கிறது? ஏற்கனவே ஒரு மாணவி மாயமான நிலையில் மற்றொரு மாணவி தற்கொலை முயற்சி: பெற்றோர்கள் கலக்கம்…!
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு விரும்பத்தகாத சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கல்லூரி விடுதியில் தங்கி கல்வி பயின்ற மாணவிக்கு ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில்
குதித்தனர். அதிகாரிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். இந்தநிலையில் கடந்த மாதம் 15ம் தேதி எம்சிஏ படிக்கும் மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த மாணவி ஓஜஸ்வி குப்தா கல்லூரியில் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தல் காரணமாக வெளியே சென்றவர் இன்னும் கல்லூரி திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார்?, என்ன ஆனார்? என்று இதுவரை தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் துவாக்குடி போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அவரது பெற்றோர் மத்திய பிரதேச மாநில முதல்வரை சந்தித்து தனது மகளை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என கூறி மனு கொடுத்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க, சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுஜய்சிதி என்ற மாணவி விடுதியில் தங்கி கட்டிடக்கலை பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர், தனக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்று தனது பெற்றோரிடம் அடிக்கடி கூறிவந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி தலைவலி, காய்ச்சலுக்கு பயன்படுத்தக்கூடிய பாராசிட்டமல் மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது சம்பந்தமாக தனது தாயிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு பதறி துடித்த அவரது தாய் உடனடியாக என் ஐடி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தனது மகள்அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளதாகவும், அவரைக் காப்பாற்றும் படியும் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து என்ஐடி நிர்வாகம் உடனடியாக சுஜய் சிதியை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்ஐடி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து இதுபோன்று பிரச்சனைகள் ஏற்பட்டு வருவது பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி என்ஐடி-ல் என்ன நடக்கிறது? மாணவிகள் ஏன் இவ்வாறான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை உயர் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Comments are closed.