அமைச்சரவையில் மாற்றம் இருந்தாலும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளில் மாற்றம் இருக்காது: திருச்சியில் ஜி.கே.வாசன்…!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று(03-10-2024) நடைபெற்றது.
கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை ஜி.கே.வாசன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 2026-ல் த.மா.கா. குரல் சட்டமன்ற தேர்தலில் ஒலிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் செயல் பட்டு வருகிறோம். அதற்காக தற்போது உறுப்பினர்கள் சேர்க்கையும் தீவிரமாக நடந்து வருகிறது. மதுவிலக்கு கொள்கையை ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டும். விசிக மாநாட்டில் அகில இந்திய அளவிலான கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். அவர்கள் மாநிலங்களில் மதுக் கொள்கை என்ன என்பதை அவர்கள் விளக்க வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதற்கான முழு அதிகாரம் அரசிடம் தான் உள்ளது. மது கொள்கை மூலம் மக்களை ஏமாற்றுபவர்களை வாக்கு சீட்டு மூலம் மக்கள் ஏமாற்றுவார்கள். மீனவர்கள் பிரச்சனை தொடர் பிரச்சனையாக உள்ளது. 160- க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். நாளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு செல்கிறார். அவர் புதிய அதிபரிடம் இந்த விவகாரம் குறித்து பேசி மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தமிழக அரசின் தவறான கல்விக் கொள்கையால் 30 ஆயிரம் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கிற தமிழக அரசின் பிடிவாதத்தால் தான் இந்த நிலை. அவர்கள் தங்களின் பிடிவாதத்தை கைவிட வேண்டும்.
நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றில் உள்ள நன்மைகள் குறித்து தமிழக அரசுக்கு தெரியவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் ஒரு சட்டம் தமிழகத்திற்கு ஒரு சட்டமா?. அமைச்சரவையில் மாற்றம் இருந்தாலும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளில் மாற்றம் இருக்காது என மக்கள் எண்ணும் அளவிற்கு தான் இந்த ஆட்சியின் நிலை உள்ளது. உடல்நிலை சரியில்லாத ரஜினி நலமுடன் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். தமிழகத்தில் புதிய கட்சி பலர் தொடங்கி இருக்கிறார்கள். கட்சியின் தொடக்கம் ஆரவாரமாக தான் இருக்கும். அது தான் த.வெ.க.வில் நடக்கிறது. இதைத் தாண்டி வேறு எதுவும் இதில் கருத்து கூற விரும்பவில்லை என தெரிவித்தார்.
Comments are closed.