திருச்சியில் சாலையில் கிடந்த தங்க சங்கிலியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மாநகராட்சி ஊழியர் நேர்மைக்கு பாராட்டு குவிகிறது…
திருச்சி, ஸ்ரீரங்கம் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் பா. முத்துசாமி (44). இவர் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்தபோது, அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலி மாயமானது. இது குறித்து அவர் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சத்திரம் முனிசிபல் காலனி பூசாரித்தெருவைச் சேர்ந்த மாநகராட்சி ஊழியர் சரவணன், சத்திரம் பகுதியில் வீதியில் கிடந்ததாக கூறி தங்க சங்கிலியை கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அது ஏற்கனவே மாயமானதாக கூறப்பட்ட முத்துசாமி என்பவரின் தங்க சங்கிலி என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில், முத்துசாமியை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, தொழிலாளி சரவணன் மூலமே சங்கிலியை வழங்க வைத்தனர். கீழே கிடந்த தங்க சங்கிலியை எடுத்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த திருச்சி மாநகராட்சி ஊழியரின் நேர்மையை அனைவரும் பாராட்டினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.