மதுரை-செல்லூர் 60 அடி ரோடு ராமச்சந்திரன் காம்பவுண்டைச் சேர்ந்தவர் பாலன் என்ற பாலசுப்ரமணியன். இவர், மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் துணைச்செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர், தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி, இன்று(16-07-2024) காலை சொக்கிகுளம் அருகே வல்லபாய் சாலை பகுதியில் பாலசுப்ரமணியன் நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், பாலசுப்ரமணியனை சுற்றி வளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசுப்ரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது அரசியல் காரணமாக நடந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த பகுதியில் தான், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வீடு உள்ளது. அவர் வீட்டின் அருகில் அதிகாலையில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.