Rock Fort Times
Online News

தேசிய ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…!

10-வது தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஸ்கேடிங் ரேஸ், ஸ்கேடிங் ஜிக்ஜாக், ஸ்கேடிங் ஸ்லோ வாக் மற்றும் ஸ்கேடிங் ஹர்டில்ஸ் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் இருந்து 10, 14, 18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவினர் மற்றும் சீனியர் ஆண்கள், பெண்கள் பிரிவினர் என 90- க்கும் அதிகமான ஸ்கேடிங் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். புதுச்சேரி, அந்தமான், மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திர பிரதேசம் என பத்துக்கும் அதிகமான மாநிலங்களில் இருந்து 500 க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதன் இறுதிப் போட்டியில் அதிக புள்ளிகளை பெற்று தேசிய அளவில் தமிழகம் முதல் இடத்தை பிடித்து தங்கக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

அவர்களில் 10 வயதுக்கு உட்பட்டோர் தனிநபர் பிரிவில் திருச்சி, வேங்கூர் செல்லம்மாள் மெட்ரிக் பள்ளியில் நான்காவது படிக்கும் மாணவர் எஸ்.கவின், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் செல்லம்மாள் சிபிஎஸ்இ. பள்ளி மாணவன் டையூஸ், 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஓஎப்டி கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவன் கிருத்திக் ஆகியோர் உட்பட 27 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். வெற்றிக் கோப்பையுடன் தமிழகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்த சாதனையை நிகழ்த்தியதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு ஏரோ ஸ்கேட்டோபால் சங்கத் தலைவர் ராகேஷ் சுப்ரமணியன், செயலாளர் பிரவீன் ஜான்சன், பொருளாளர் தங்கமுருகன் மற்றும் பயிற்சியாளர்கள் அமல் ஜோயல், வினோத் ஆகியோரை வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர். அப்போது தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் கூறும் போது,ஏரோஸ்கேட்டோபால் போட்டிக்கு திருச்சியில் ஒரு மைதானம் அமைத்தால் சர்வதேச அளவில் தமிழக வீரர்கள் ஜொலிப்பார்கள். அதற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்