திருச்சி, இக்பால் காலனி முடுக்குப்பட்டி சாலை பகுதியில் டாஸ்மாக் கடையுடன் பாரும் உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்குள்ள பாரில் முடுக்குப்பட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி என்கின்ற பன்னீர் செல்வமும் (வயது 47) , அவரது நண்பர்
ராகவேந்திரனும் மது அருந்திக் கொண்டிருந்தனர். வெள்ளைச்சாமி, சந்தானம் என்பவரிடம் பிளம்பராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், பாரில் மது குடித்துக்கொண்டிருந்த சந்தானத்திற்கும், வெள்ளைச்சாமிக்கும் இடையே சம்பளம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரத்தில் வெளியேறிய சந்தானம், தனது நண்பர்களை அழைத்து வந்துள்ளார். பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதையடுத்து வெள்ளைச்சாமி மதுபான பாரில் இருந்து வெளியே நடந்து சென்றபோது சந்தானம் மற்றும் அவரது நண்பர்களான பாலாஜி, சீனிவாச பெருமாள், பாலமோகன்ராஜ், கோகுல், ராம்குமார் ஆகியோர் இக்பால் காலனி அருகில் வெள்ளைச்சாமியை வழிமறித்து இரும்பு ராடு மற்றும் உருட்டு கட்டை ஆகியவற்றால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வெள்ளைச்சாமியின் தம்பி நாகராஜ் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளைசாமியை கொலை செய்த சந்தானம் , பாலாஜி, சீனிவாசபெருமாள், பாலமோகன்ராஜ், ராம்குமார் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான கோகுல் என்பவரை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வெள்ளைச்சாமி ரவுடி பட்டியலில் உள்ளார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.