கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயதரணி. இவர், மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ.பதவியை வகித்து வருபவர். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் முதன்மை கொறடா, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் விஜயதரணி. எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் மறைவை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், வசந்தகுமார் மகன் விஜய் வசந்துக்கு ‘சீட்’ வழங்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்தார். இந்த முறையாவது தனக்கு கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என தலைமையிடம் கேட்டுப் பார்த்தார். ஆனால், அதற்கான வாய்ப்பு இருக்காது என தெரிந்ததும் பாஜகவில் இணைய முயற்சி செய்து வந்தார். இந்நிலையில் விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்தது குறித்து விஜயதரணி கூறுகையில், “சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன். தற்போது பாஜகவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள், திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன். தமிழ்நாட்டில் பாஜகவை வலுபெற வைப்போம். தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது. பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.