ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடக முதல்வருடன், தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு: மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சு..?
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை நேரில் சந்தித்து காவிரி நீர் மற்றும் மேகதாது விவகாரம் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக அரசு மாதந்தோறும் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தராமல் இழுத்தடித்து வருகிறது. அதேபோல, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என செயல்பட்டு வருகிறது. இவ்விரு பிரச்சனைகளும் தமிழ்நாட்டிற்கு தலைவலியாக அமைந்துள்ளது. இதனை தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை சட்ட நடவடிக்கை எடுத்த நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசும் அதனை தொடர்ந்து வருகிறது. இவ்வாறான சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்லவுள்ளார். பெங்களூருவில் அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை அவர் சந்திக்க உள்ளதாக அமைச்சர் வினோத் உறுதி செய்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறுகையில், “ஆகஸ்ட் 3ம் தேதி தமிழக முதலமைச்சர் கர்நாடகா செல்லவுள்ளார். தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம், அது தமிழ்நாட்டின் உரிமை என சொல்லி வருகிறோம். அதை விட்டுக்கொடுக்க மாட்டோம். இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் தான் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார். கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழையில்லாத காரணத்தால் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கவில்லை என கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் நம் உரிமைக்காக முதலமைச்சர் விஜய் அதனைக் கேட்டுப் பெறுவார் என தெரிவித்துள்ளார்.

Comments are closed.