ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாடுகள் “கசாப்பு” கடைக்கு விற்பனையா ?
நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தல்...
நூற்றிஎட்டு வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்கள் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்களில் சிலர் காளை மற்றும் பசுமாடு போன்றவற்றை கோவிலுக்கு காணிக்கையாக வழங்குகின்றனர். இதுபோன்று பக்தர்கள் கால்நடைகளை கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது என்பது பல நூறு ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் வழக்கமாகும்.
மற்ற சில கோவில்களில் உள்ளது போல ஆடு, மாடுகளை தெய்வத்திற்கு பலியிடும் வழக்கம் ஶ்ரீரங்கம் கோவிலில் இல்லையென்பதால், பக்தர்கள் தானமாக வழங்கும் மாடுகளை மட்டும் திருக்கோவில் சார்பில் கோசாலை அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனியாக இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு அதற்கு சிலர் பராமரிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கோவிலுக்கு காணிக்கையாக பக்தர்கள் மூலம் வழங்கப்படும் மாடுகளை போதிய இடவசதியில்லாததால் பராமரிக்க முடியவில்லை என்கிற காரணத்தைகூறி சாமிக்கு நேர்ந்து, வளர்க்கப்பட்ட கால்நடைகளை கோவில் நிர்வாகம் வாங்க மறுப்பதாக பக்தர்கள் சிலர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதனை மையமாக வைத்து மாபெரும் கொடுஞ்செயலும், மிகப்பெரிய தில்லுமுல்லும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத அரங்கன் பக்தர் ஒருவர் நம்மிடம் பேசினார்.,
“ஶ்ரீரங்கம் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்படும் அனைத்து மாடுகளையும் வாங்கி அதனை பராமரிக்க இயலாத சூழல் உள்ளது என்பதை நாங்களும் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் இதே காரணத்தை எத்தனை காலத்திற்குதான் சொல்லிக்கொண்டிருப்பார்கள் ? அரங்கனுக்கென்று கேட்டால்… ஆயிரத்தில் இல்லை, லட்சங்களில் இல்லை, கோடிகளில் பணத்தை கொட்டிகுவிக்க உலகம் முழுவதும் அவருடைய பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உதவியுடன் மற்ற கோவில்களுக்கெல்லாம் முன்உதாரணமாக, பிரமாண்டமான கோசாலையை ஶ்ரீரங்கம் திருக்கோவில் நிர்வாகம் நினைத்தால் உருவாக்கமுடியாதா ?கோவில் சார்பில் மாடுகள் வாங்கமாட்டார்கள் என்கிற விபரம் அறியாத பக்தர்கள் கொண்டுவரும் மாடுகளை ஶ்ரீரங்கம் திருக்கோவில் வளாகத்திற்கு வெளியே வைத்து, மாடுகளை கோவிலில் வாங்கமாட்டார்கள். நாங்கள் இங்குள்ள கோசாலையில் தான் வேலைசெய்கிறோம். யாரிடம் வேண்டுமென்றாலும் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என ஏதேதோ பேசி, பக்தர்களிடமிருந்து மாடுகளை அபகரித்து, அவற்றை கசாப்பு கடைக்கு சிலர் விற்று விடுவதாக புகார் ஒன்று நீண்ட நெடுங்காலமாக உள்ளூர் பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. இது மிகப்பெரிய கொடுஞ்செயலாகும். இந்த விபரம் திருக்கோவில் நிர்வாகத்திற்கு 100% தெரியும்.
ஆனால் இதனை ஏனோ கண்டும் காணாமலும் விட்டுவிடும் மர்மம் தான் எங்களுக்கு புரியவில்லை.பக்தர்களால் கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் மாடுகள் குறித்த மேற்சொன்ன இவ்விவகாரம் குறித்து ஶ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரியப்பன் விசாரித்து கோவில் மாடுகளை கசாப்பு கடைக்கு விற்கும் திருட்டு நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு இனி கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பிலேயே பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கோசாலையை விரைவில் உருவாக்கிடவேண்டும் என அனைத்து அரங்கன் பக்தர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்றார் அவர்.
ஶ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தை பொறுத்தவரை இங்கு ஜே.சியாக கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேலாக கடமையாற்றி தற்போது சென்னையில் பணியாற்றிவரும் ஜெயராமன் அவர்களை யாராலும் மறக்க இயலாது. காரணம் அனைத்து தரப்பினர்களையும் அனுசரித்து சிரித்தமுகத்துடன் மிக சிறப்பாக பணியாற்றியவர். அவரை போன்றே திருக்கோவிலின் புதிய ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் செ.மாரியப்பன் மிகவும் நியாயமான மனிதர், யதார்த்தமாக பழகுபவர் என்றே அறநிலையத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இவருடைய பணிக்காலத்திலாவது இவ்விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.