பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வழக்கம்போல நேற்றும் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனைமலை போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ் உடை அணிந்த பெண் ஒருவர் பாதுகாப்பு பணியில் பரபரப்பாக ஈடுபட்டு கொண்டு இருந்தார். வழக்கமாக பணியாற்றும் போலீசாருக்கு அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், போலீஸ் அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பணபள்ளியை சேர்ந்த ரீத்தா என்பதும், காவல்துறையின் மீதுள்ள ஈர்ப்பினால் பலமுறை காவல் பணியில் சேர முயன்றும் தோல்வி அடைந்ததால் போலீஸ் உடை அணிந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்த ஆனைமலை போலீசார், ரீத்தாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினார்
Comments are closed.