திருச்சி தெப்பக்குளத்தில் ரூ.8.8 கோடியில் ஒலி, ஒளி லேசர் காட்சிகள்- பொதுமக்கள் விரைவில் காண ஏற்பாடு…
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் திருச்சி மாநகர பகுதிகளில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில், திருச்சி தெப்பக்குளத்தில் ஒலி, ஒளி லேசர் காட்சிகள் மூலம் வரலாற்று சிறப்புகளை அறிந்து கொள்வதும் ஒன்றாகும் .
இதற்கான பணிகள் ரூ.8.8 கோடியில் நடைபெற்று முடிந்துள்ளன. இதற்கான முன்னோட்டத்தை சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சி நேரம், நுழைவு கட்டணம் ஆகியவற்றை இறுதி செய்யும் தீர்மானம் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் நிறைவேறியது.
அதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை மூன்று நிகழ்ச்சிகளும், மற்ற நாட்களில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை இரண்டு நிகழ்ச்சிகளை நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் அரை மணி நேரம் ஒளிபரப்பாகும். திங்கட்கிழமை கிழமை தாயுமானவர் சுவாமி கோயில், செவ்வாய்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில், புதன்கிழமை திருவானைக்காவல் கோவில், வியாழன் சமயபுரம் மாரியம்மன் கோயில், வெள்ளிக்கிழமை கல்லணை, சனிக்கிழமை மலைக்கோட்டை, ஞாயிற்றுக்கிழமை கரிகால சோழன் ஆகியோரின் வரலாற்று சிறப்புகள் இடம்பெறும்.
தெப்பக்குளத்தின் நடுவில் நிறுவப்பட்ட கட்டுப்பாட்டு அலகு நீரூற்றுகளில் லேசர் கற்றைகள் மூலம் ஆவணப்படக் காட்சிகளை பொதுமக்கள் தெப்பக்குளம் கரையில் உள்ள பார்வையாளர்கள் கேலரியில் இருந்து காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைக் காண 8 முதல் 15 வயது வரையிலான சிறுவர் சிறுமிகளுக்கு 25 ரூபாயும் , 15 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி விரைவில் நடத்தப்பட்டு நிகழ்ச்சியை காண பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.