Rock Fort Times
Online News

தங்கத்தை பத்திர வடிவில் வாங்க வேண்டுமா?…

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால், குழந்தைகளுக்கு ஏதாவது சேமித்து வைக்க வேண்டும் என்று பல பெற்றோர்கள் நகைக்கடையில் உள்ள மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பணம் செலுத்தி வருகிறார்கள். அதற்கான முதிர்வு காலம் முடிந்த பிறகு செலுத்திய தொகைக்கு தங்க நகை வாங்குகிறார்கள். ஆனால், தங்கத்தை பத்திரமாக வாங்க முடியுமா? என்று கேட்டால் முடியும் என்கிறது நமது அஞ்சல் துறை. திருச்சி தலைமை அஞ்சலகம், லால்குடி தலைமை அஞ்சலகம் மற்றும் 99 துணை அஞ்சலகங்களில் தங்கப்பத்திரம் நாளை மறுநாள்(13-02-2024) முதல் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்மூலம் ஒருவர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம். முதலீடு காலம் 8 ஆண்டுகள் ஆகும். 8வது ஆண்டு இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்க பத்திரம் பணமாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்கப்பத்திரத்தை மாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீடுகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் மூலம் 2.5 சதவீதம் வட்டி கணக்கீடு செய்து ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை முதலீட்டாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும். இது தங்கப்பத்திர முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் ஆகும். இந்தத் திட்டமானது நாளை
முதல் வருகிற 16 ந்தேதி வரை ஒரு கிராம் விலை ரூ.6263/- என ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ளது. திருச்சி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்ய பான் கார்டு, ஆதார் கார்டு, அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம் அல்லது வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் முதல் பக்கம் அசல் மற்றும் நகல் எடுத்துச் செல்ல வேண்டும். தங்கத்தை பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் தங்க மதிப்பிற்கு சேமிக்கலாம். தங்கத்தை பத்திரமாய் வாங்கினால் பத்திரமாக இருக்கும். இந்த அரிய வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு
திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ஆண்ட்ரோடேஷன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்