நாடாளுமன்ற தேர்தல்: திமுக சார்பில் 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் தொகுதி வாரியாக பரப்புரை கூட்டங்கள்…!
பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க. சார்பில் வருகிற 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தொகுதி வாரியாக பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறும் என தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க. அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கட்சி முன்னணியினர் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையில் பங்கேற்று அ.தி.மு.க.வை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர். அதேபோல, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் 2024-ல் கடந்த பத்தாண்டு காலத்தில் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டுக்கு இழைத்த அநீதிகளையும், மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்போது நாடகமாடும் அ.தி.மு.க.வின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாக கட்சி முன்னணியினர், “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க தி.மு.க. தலைவரின் குரலாக வரும் 16, 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களை பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டங்களாக நடத்திட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.