திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை திறக்கப்படாமல் கடந்த 13 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கிறது. இந்நிலையில், இந்த சிலையை திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மறைந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சியில் சிலை நிறுவவேண்டும் என்ற சிவாஜி ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சிலை அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மான அடிப்படையில் திருச்சி, பாலக்கரை மெயின் ரோட்டில் முன்பிருந்த பிரபாத் தியேட்டர் எதிரிலுள்ள ரவுண்டானாவில், 23-02-2011 அன்று முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. அதன்பிறகு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு குறுக்கிட்டதால் திறப்புவிழா நடைபெறவில்லை. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, பலமுறை ரசிகர்கள் கோரிக்கை விடுத்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவரும், சிவாஜி சமூகநலப்பேரவை தலைவருமான கே.சந்திரசேகரன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல், சிலை அதே இடத்தில் சாக்குப் பையால் மூடப்பட்ட நிலையில்,கடந்த 13 ஆண்டுகளாக இருக்கிறது.
இதற்கிடையில், சிலையை திறக்கவேண்டும் என்று, மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரசிகர் தொடர்ந்த வழக்கில், கோர்ட்டு உத்தரவின்படி, தற்போது சிலை நிறுவப்பட்டிருக்கும் சாலையில் சிலையைத் திறக்க அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலையை இப்போது நிறுவப்பட்டிருக்கும் இடத்திலிருந்து அகற்றி, வேறொரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆகவே, திருச்சியில் நிறுவப்பட்டுள்ள நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலை சம்பந்தமான வழக்கில், மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையிலும், திருச்சியில் வேறொரு முக்கிய சந்திப்பில், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.