உயர்கல்வி பயில உங்கள் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பி வையுங்கள் – பெற்றோர்களுக்கு திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் அறிவுறுத்தல்…!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை ஊராட்சிக்குட்பட்ட தெற்கு சாலப்பட்டி கிராமத்தில் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டில் ஒருவர் கூட நிலம் இல்லாமல் இருக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். நாட்டின் வளர்ச்சிக்கு உங்களிடம் இருந்து முதலமைச்சரும், மாவட்ட நிர்வாகமும் எதிர்பார்ப்பது என்னவென்றால் வளமான எதிர்காலம் கொண்ட தமிழ்நாடு. வளமான தமிழ்நாடு உருவாக வேண்டும் என்றால் உங்களுடைய பிள்ளைகள் முழுமையாக கல்வி கற்க வேண்டும். அதுதான் எதிர்கால தமிழகத்தை முன்னெடுத்து செல்வதற்கு உறுதுணையாக இருக்கும். இந்தியா முழுவதும் 12-ம் வகுப்பு படித்துவிட்டு உயர்கல்விக்கு செல்லாத நிலை இருக்கிறது. இந்திய அளவில் 25 சதவீதம் பேர் உயர்கல்விக்கு செல்கின்றனர் என்றால், தமிழகத்தில் 50 சதவீதம் பேர் உயர்கல்விக்கு செல்கின்றனர். இதனை 100% ஆக்க வேண்டும் என்றால் உங்களுடைய முழு ஒத்துழைப்பு மிக மிக அவசியம். நிறைய தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை உயர்கல்வி பயில அனுப்பாமல், கொத்தனார் வேலைக்கு சென்றால் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என அனுப்புகின்றனர். இது மிக மிக தவறான ஒரு விஷயம். உயர் கல்வியை கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி மட்டுமல்லாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதில் தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது. நமது மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு உயர்கல்விக்கு செல்லாதவர்கள் 2800 பேர் இருந்தனர். “உயர்வுக்கு படி” என்ற திட்டத்தின் மூலமாக 1700 மாணவர்களை உயர்கல்வி பயில சேர்த்துள்ளோம். உங்களது பிள்ளைகளுக்கு உயர்கல்வியை பற்றி எடுத்து சொல்லுங்கள். மேலும் இதைத் தாண்டி ஒழுக்கம் என்பதை கற்றுக் கொடுங்கள். இந்த இரண்டையும் இரண்டு கண்கள் போல நீங்கள் எடுத்து கூற வேண்டும். இன்னும் சில வருடங்கள் கழித்து இதேபோன்று கிராம சபை கூட்டத்தில் என் இடத்தில் உங்கள் பிள்ளை அமர்ந்து பேச வேண்டும் என கூறினார். கூட்டத்தில் லால்குடி கோட்டாட்சியர், மாவட்ட திட்ட இயக்குனர், துணை ஆட்சியர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.