முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களிப்பு…!
தமிழ்நாட்டில் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் இன்று (ஏப்.23) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அதேபோல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின்
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி.
கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி, பேரனும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான இன்பநிதி ஆகியோருடன் சென்ற திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி
தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்.
விஜய்
சென்னை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட நீலாங்கரையில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். விஜய்யின் வருகையால் வாக்குச்சாவடி மையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பிரேமலதா விஜயகாந்த்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் குளோபல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த் தனது இளைய மகனும், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியின் தேமுதிக வேட்பாளருமான விஜய பிரபாகர், நடிகரும், மூத்த மகனுமான சண்முகராஜா ஆகியோருடன் வந்து தங்களின் வாக்கினைப் பதிவுச் செய்தார்.
சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
சென்னை – நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தினார். இதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

Comments are closed.