Rock Fort Times
Online News

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு ‘பணமழை’… ஒரு ஓட்டுக்கு ரூ.1000 முதல் ரூ.25000 வரை பட்டுவாடா…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடக்கிறது. இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படியும், 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்பதற்காகவும் தேர்தல் ஆணையம் கடுமையாக போராடி வருகிறது. இதற்காக தேர்தல் பறக்கும் படையினர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் இதுவரை 1,262 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு கெடுபிடிகள் இருந்தும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ஒரு சில தொகுதிகளில் அரசியல் கட்சியினர் இரவு நேரங்களில் மின்சாரத்தை நிறுத்திவிட்டு வாக்காளர் லிஸ்டை கையில் வைத்துக்கொண்டு வீடு தேடிச் சென்று பணம் பட்டுவாடா செய்துள்ளனர். அந்தவகையில் ஒரு வாக்காளருக்கு ரூ.ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ரூ.5000 வழங்கப்பட்டு உள்ளதாகவும், அந்த வகையில் வாக்காளர்களுக்கு ரூ.200 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோல பல தொகுதிகளில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க.சார்பில் யாருக்கும் பணம் கொடுக்கப்படவில்லை. மாறாக, இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சார்பில் ஒரு வாக்காளருக்கு ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. அதேபோல கட்சி நிர்வாகிகளுக்கும் பணம் தாராளமாக கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் விஜயை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக திருச்சி கிழக்கு தொகுதியில் மட்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி இறைக்கப்பட்டு உள்ளது. அதேபோல திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு தொகுதியில் வாக்காளர்களுக்கு ‘பணமழை’ பொழிந்துள்ளது.

தமிழகத்தின் உள்ள வேட்பாளர்களில் ‘நம்பர் ஒன்’ பணக்காரராக உள்ள அந்த வேட்பாளர் சார்பில் ஒரு வாக்காளருக்கு ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல அந்தந்த தொகுதிகளின் வேட்பாளர்களின் வசதிக்கேற்ப பணம் மற்றும் பரிசு பொருட்கள் தாராளமாக வழங்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் மற்றும் வெளி மாநிலங்களில், வெளி மாவட்டங்களில் பணியாற்றும் தமிழர்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற தங்களது சொந்த பணத்தில் வாக்களிக்க வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் மத்தியில் ஓட்டுக்கு பணம் கொடுத்து குறுக்கு வழியில் வெற்றி பெற முனையும் வேட்பாளர்களை என்னவென்று சொல்வது?. இப்படி இருந்தால் நேர்மையான வேட்பாளர்கள் எப்படி வெற்றி பெற முடியும்? என்பதுதான் வாக்காளர்களின் கேள்வியாக உள்ளது. பணம் பட்டுவாடா செய்த வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்