ராக்போர்ட் டைம்ஸ் செய்தி எதிரொலி: புல்லட் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மைனர் வயது மகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்கு பாய்ந்தது… திருச்சி சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ்-க்கு பாராட்டு குவிகிறது…!
திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தெருவில் உள்ள தனது வீட்டின் முன்பு, கடந்த 21-09-2024 (சனிக்கிழமை) அன்று காலை 8-30 மணி அளவில் தீரன் என்கிற மூன்றரை வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது 10-ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்னும் சிறுவன் ஓட்டி வந்த புல்லட் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மோதியது. இதில் சுருண்டு கீழே விழுந்த அந்த சிறுவனை மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவன் சிறிதும் கண்டுகொள்ளாமல் மோட்டார் சைக்கிளில் அமர்ந்த படியே திட்டிக்கொண்டு இருந்தான். அப்போது அங்கு வந்த சிறுவனின் தாத்தா (காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்) ஓடி வந்து தனது பேரனை மீட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கே.எம்.சி.
மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவனின் தந்தை முருகராஜ் திருச்சி கே.கே.நகரில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த விபத்து தொடர்பாக காயம் அடைந்த சிறுவன் தரப்பிலிருந்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் புகார் எதுவும் பெறப்படவில்லை. காவல்துறையில் பொறுப்புள்ள ஒரு பதவியில் இருக்கும் அவர் தன்னுடைய மகனிடம் எப்படி புல்லட்டை நம்பி கொடுத்தார். ஏதோ காயங்களுடன் அந்த சிறுவன் உயிர் தப்பி உள்ளான். இதுவே வேறு விபரீத சம்பவம் ஏற்பட்டு இருந்தால் என்ன செய்வது?. இதுபோன்று நடந்து கொள்பவர்களை கண்டிக்க வேண்டிய காவல்துறை அதிகாரி ஒருவரே தனது மகனிடம் புல்லட்டை கொடுத்து அனுப்பிய சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருச்சி சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முதன் முதலில் ராக்போர்ட் டைம்ஸ் வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்தநிலையில் புல்லட் ஓட்டிய சிறுவன் மற்றும் அவனது தந்தை சிறப்பு உதவி ஆய்வாளர் முருகராஜ் ஆகியோர் மீது மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 194-ன் கீழ் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்படி புல்லட்டை ஓட்டி வந்த அந்த சிறுவன் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. நடந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுத்த திருச்சி சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ்-க்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Comments are closed.