இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர்- சப்- இன்ஸ்பெக்டர், காவலர் சஸ்பெண்ட்: திருச்சி எஸ்.பி. வருண்குமார் அதிரடி…!
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் ஐபிஎஸ் பொறுப்பேற்றது முதல் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகிறார். மேலும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளையும், போலி ஆவணங்கள் தயாரித்து நிலங்களை அபகரிப்பவர்களையும் கைது செய்து வருகிறார். குற்ற சம்பவங்களுக்கு துணை போகும் காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அந்தவகையில் திருவெறும்பூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் கிருஷ்ணசாமி என்பவர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
இந்தநிலையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணசாமி காணகிளியநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் ஜெயக்குமார் என்பவரிடம் சாதி ரீதியாக செயல்பட்டதாக காவல் கண்காணிப்பாளருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் கிருஷ்ணசாமி பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்யப்பட்டார். அதேபோன்று துறையூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் சத்யராஜ் என்பவர் புத்தனாம்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் சாதிப்பற்றுடன் செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
Comments are closed.