1987-ல் பணியில் சேர்ந்த ஓய்வுபெற்ற டிஎஸ்பிக்கள் 100க்கும் மேற்பட்டோரை திருச்சியில் ஒன்றிணைத்து மறு சந்திப்பு விழா: தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி- சட்டை அணிந்து அசத்தல்…!
1987 ஆம் ஆண்டில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு காவல் உதவி ஆய்வாளர்கள் 150 பேர் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்பட தமிழ்நாடு முழுவதும் பணியில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றினர். பின்னர் அவர்கள் படிப்படியாக எஸ்பிக்கள் ஆகவும், ஏ டிஎஸ் க்களாகவும், டிஎஸ்பிக்களாகவும் பதவி உயர்வு பெற்றனர். பின்னர் அவர்கள் ஓய்வு பெற்று பல்வேறு இடங்களில் வசித்து வந்த நிலையில் அவர்களை ஒன்றிணைத்து விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது குடும்பத்தாருடன் ஏற்கனவே ஏற்காடு, மகாபலிபுரம், கோவை, கொடைக்கானல் போன்ற இடங்களில் சந்தித்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக மறு சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி துடையூர் பகுதியில் உள்ள சோலை தங்கும் விடுதியில் செப்டம்பர் மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர்
கை குலுக்கியும், கட்டித் தழுவியும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை யொட்டி முதல் நாள் இரவு நடனம் மற்றும் பெண்களுக்கான அழகி போட்டி, ஆண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி ஆகியவை நடைபெற்றன . மறுநாள் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து வந்திருந்தவர்கள் தங்களது கருத்துக்களையும், மலரும் நினைவுகளையும் எடுத்துக் கூறினர். ஸ்ரீரங்கம் கலைமாமணி ரேவதி முத்துசாமி குழுவினரின் பரதநாட்டியம் மற்றும் சன் டிவி புகழ் அருள் பிரகாசை நடுவராக கொண்டு பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட ஆண்கள் அனைவரும் தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி- சட்டையும், பெண்கள் சேலையும் அணிந்து இருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக இந்த பேட்ஜில் பணியாற்றிய உயிரிழந்த காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி சார்பில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி எஸ்.கண்ணன், சாமிநாதன், மந்திரமூர்த்தி மற்றும் நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments are closed.