டியூசன் செல்வதாக கூறிவிட்டு சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற 4 பள்ளி மாணவர்கள் மீட்பு…!
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய பள்ளி மாணவர்கள் 4 பேர் நேற்று (06-11-2024) டியூஷன் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர்கள் இரவு 8 மணிக்கு பிறகும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் மில்லர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர். அதில், 4 பேரும் ஒரு ஆட்டோவில் ஏறி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனையடுத்து, ஆட்டோவின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணை செய்ததில், அந்த மாணவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்றது தெரிய வந்தது. அங்கிருந்து 4 பேரும் கொடைக்கானல் செல்லும் அரசு பேருந்தில் ஏறி வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், தனிப்படை போலீசார் கொடைக்கானல் புறப்பட்டு சென்றனர். அப்போது வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 4 மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 4 பேரும் கொடைக்கானலுக்குசுற்றுலா செல்ல தீபாவளிக்கு முன்னதாகவே திட்டமிட்டுள்ளனர். திட்டத்தை செயல்படுத்தும் விதமாக டியூசன் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கொடைக்கானலுக்குப் புறப்பட்டுச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, மீட்கப்பட்ட மாணவர்களை காவல்துறையினர் ஆவடி அழைத்து வந்து அவரவர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். புகார் அளித்த 8 மணி நேரத்தில் 4 மாணவர்களையும் மீட்ட திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான தனிப்படை போலீசாரை காவல்துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
Comments are closed.