நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மாநிலங்களவையில் தமிழகத்திற்கு ஒரு சீட் காலியானது. சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் பலம் கொண்ட ஆளும் தவெகவை சேர்ந்த ஒருவரே, மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கேட்டுக்கொண்டதன் பேரில் மாநிலங்களவை பதவிக்கான இடம் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன்பேரில், காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அந்த இடத்திற்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. கூட்டணிக் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் பிரவீன் சக்கரவர்த்திக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி இன்று( ஜூன் 5) தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக வெற்றிக் கழகம்+ காங்கிரஸ்+விடுதலைச் சிறுத்தைகள் கட்சி+ இந்திய யூனியன் முஸ்லிம் லீக்+ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி+ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடங்கிய தமிழ்நாடு சமூகநீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் எம்.பி. வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும், பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.