மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகள் சிலர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருகின்றனர். விமான நிலைய அதிகாரிகள் சோதனை இடும் போது அவர்கள் வசமாக சிக்கிக் கொள்கின்றனர். சமீபத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்த 3 பயணிகள், தங்கத்தை உருக்கி அதை பட்டன் போல அமைத்து பேண்டில் பொருத்தி கடத்தி வந்த போது பிடிபட்டனர் . தங்கத்தை தான் இவ்வாறு கடத்துகிறார்கள் என்றால் சில அரிய வகை விலங்குகளையும் கடத்தி வருவது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. அந்தவகையில் நேற்று மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது பெண் பயணி ஒருவர் கொண்டு வந்த கைப்பையை சோதனை செய்தபோது அதில் 2 அரியவகை அணில்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண் மலேசியாவை சேர்ந்த விஜயலட்சுமி என்பதும், அவர் தனது கைப்பையில் மறைத்து அரிய வகை அணில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதிகாரிகள் விசாரணையின் போது, ஒரு அணில் தப்பி ஓடியது. அதனை பிடிக்க முயன்ற ஒரு அலுவலரின் கையை அந்த அணில் கடித்ததால், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விமான நிலையத்துக்கு வந்து அணிலை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.