திருச்சியில் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்து விழிப்புணர்வு வாகனம்..!
அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரோபோட்டிக்ஸ் வாகனம் மற்றும் துணிப்பை பயன்பாட்டை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இன்று(1-10-2023) தொடங்கி வைத்தார். பொதுமக்கள் தங்களின் பழைய துணிகளை கொடுத்து துணி பைகளாக தைத்துக் கொள்வதற்கான திட்டமும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன் மற்றும் கோட்டத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே. என்.நேரு கூறுகையில், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாக துறையும் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. மழைக்காலம் தொடங்கியுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் மழைநீர் வடிகால் முழுவதுமாக கட்டப்பட்டுள்ளது. எங்கேயாவது விடுபட்டிருந்தால் புதிதாக கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பணிகள் தொடங்கப்படும். எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காதவாறு வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள போதிய நிதியை தமிழக முதலமைச்சர் வழங்கியுள்ளார். முன்பெல்லாம் முழங்கால் அளவு தண்ணீர் நின்றாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். தற்போது கணுக்கால் அளவு தண்ணீர் நின்றால் கூட குறை சொல்கிறார்கள். திருச்சி மாநகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டது. மீதி உள்ள பணிகளும் விரைவில் முடிக்கப்படும் .
திருச்சி குடமுருட்டியில் இருந்து பஞ்சப்பூர் வரை கோரையாற்று கரையில் 40 அடி அகலத்திற்கு சிமெண்ட் ரோடு போடுவதற்கு 330 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து கரையையும் பலப்படுத்துவதற்கான பணிகள், நகரத்தை இரண்டாக பிரித்து சாலை போடும் பணிகள் நடைபெறுகிறது என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.