திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் செல்வராணி. இவர் தனது ஸ்கூட்டரில் செல்லும்போது அதுவும் சீருடையில் செல்போனில் பேசியபடியே ஓட்டி சென்றார். மேலும், தலைகவசமும் அணியவில்லை. அப்போது அவ்வழியே வாகனத்தில் சென்ற ஒருவர், அதை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். மேலும் அவர், பெண் காவலரை முந்தி சென்று ஏன் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றவில்லை, போக்குவரத்து விதிமுறைகள் எங்களுக்கு மட்டும்தானா உங்களுக்கு பொருந்தாதா? என அந்த பெண் காவலரிடம் கேட்கிறார். அதற்கு அந்தப் பெண் காவலர் அலட்சியமாக பதில் அளிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனைப்பார்த்த திருச்சி காவல்துறை அதிகாரிகள், செல்வராணிக்கு ரூ.2000 அபராதம் விதித்தனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்கக் கூடாது என ரூல்ஸ் பேசி அபராதம் விதிக்கும் காவல்துறையினரே இவ்வாறு பொறுப்பற்ற முறையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் செல்போன் பேசியபடி அதுவும் ஹெல்மெட் அணியாமல் செல்வது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறானவர்கள் மீது அபராதம் விதிப்பதோடு மட்டுமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.