மதுரையில் போலீஸ்காரர் எரித்து கொலை:- போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற குற்றவாளி மீது துப்பாக்கி சூடு…!
மதுரை மாவட்டம், எரியக்கரை அருகே மார்ச் 19ம் தேதி சாலையோரம் எரிந்த நிலையில் ஆண் ஒருவரது உடல் கிடந்தது. இதில் அவர் தனிப்படை காவலரான மலையரசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும், ஆட்டோ டிரைவர் மூவேந்திரன் என்பவர் மலையரசனை கொலை செய்தது தெரிய வந்தது. சம்பவத்தன்று காவலர் மலையரசன் இவரது ஆட்டோவில் தான் சென்றுள்ளார். அப்போது பணத்திற்கு ஆசைப்பட்டு ஆட்டோ டிரைவர், மலையரசனை கொலை செய்ததும் தெரியவந்தது. அதன்பேரில் இன்று( மார்ச் 24) காலை மூவேந்திரனை பிடிக்க போலீசார் சென்றனர். அப்போது அவர் போலீசாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்த மூவேந்திரனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்ததும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. காவலர் கொலை வழக்கில் குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed.